மகர ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

0
542

இரக்க சுபாவம் கொண்டவர்களே! ராசிக்கு 2-ல் சுக்கிரன் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் சிந்தித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் சனி 12- ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து முடிவு எடுக்கவும்.

ராகு வருடம் முழுவதும் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

14.4.19 முதல் 18.5.19 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசாரமாக 12-ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும்.

28.10.19 முதல் 27.3.20 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும். கடன் கொடுப்பது வாங்குவதில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாரின் உடல் நலனில் கவனம் தேவை.

6.7.19 முதல் 23.7.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

10.8.19 முதல் 25.9.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை எடுத்தாலும் தாமதமாக முடியும் நிலையும் உண்டாகும்.

மாணவர்கள் உயர்கல்வியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.

வியாபாரத்தில் உங்கள் அனுபவ அறிவு பளிச்சிடும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும் போராடிப் பெற்றுவிடுவீர்கள். சில நேரங்களில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் மாற்றம் ஏற்படும். அயல்நாட்டு நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்கு சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு அவர்களுடைய படைப்புகளில் மற்றவர்களால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் தீரும். வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையும்.

இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருமானத்தையும் உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் பெருமாளை நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், கோயிலில் அன்னதானம் செய்வதும் நல்லது.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here