தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படம் தமிழில் “பக்கிரி”- திரைவிமர்சனம்!

0
610

குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார்.

சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார்.

அப்பா யார் என்றே தெரியாமல் இருக்கும் தனுஷை, அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார். பாரீஸ் சென்ற தனுஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது? தன் கதை மூலம் மூன்று இளைஞர்களை நல்வழிப் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு சிறப்பு. அவரது திறமைக்கு தீனி போடும் விதத்தில் நகைச்சுவை, எமோ‌ஷனல், காதல் எல்லாம் கலந்த கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல், மிகவும் இயல்பான தனுஷை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் மனிதர்களிடமும் சிக்கி தவிக்கும் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.

ஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினைசி பெஜோவும் படத்திற்கு சிறப்பான தேர்வு.

தனுஷின் கூட்டாளியாக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர், தனுஷின் அம்மாவாக வரும் அம்ருதா ஆகியோரும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார்கள்.

பல நாடுகளில் நடக்கும் கதை என்பதால் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு அந்தந்த நாட்டின் சிறப்பான இடங்களை அழகாக காட்டியுள்ளது. பாராசூட்டில் தனுஷ் பறக்கும் காட்சிகளும் ஈபிள் டவர் காட்சிகளும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. நிக்கோலஸ், அமித் திரிவேதி கூட்டணியின் இசை ரசிக்க வைத்திருக்கிறது.

மிகவும் எளிமையான கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கென் ஸ்காட். வாழ்க்கையின் தத்துவத்தை எளிய கதை மூலம் உணர்த்தியிருக்கிறார். ஆங்கில படங்களுக்கே உரித்தான சில லாஜிக் மீறல்கள் இப்படத்திலும் காண முடிகிறது. மொத்தத்தில் ‘பக்கிரி’ வாழ்க்கை தத்துவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here