மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் பாலதண்டாயுதபாணி!

0
806

மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.

திருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.

திருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று இந்த கோவிலுக்கு நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.

இதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் – கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here